தமிழ்நாட்டில் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, ஜப்பானிய மூளைக் காய்ச்சல் பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் டெங்கு, மலேரியா போன்ற பாதிப்புகள் ஓரளவு இருந்தாலும், ஜப்பானிய மூளைக் காய்ச்சலின் தாக்கம் பெரிய அளவில் இல்லை.

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 3,211 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல, 45 பேர் சிக்குன்குனியாவாலும், 141 பேர் மலேரியாவாலும், 100-க்கும் மேற்பட்டோர் லெப்டோஸ்பிரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சலாலும், 1,000-க்கும்மேற்பட்டோர் ஸ்கரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானிய மூளைக் காய்ச்சலுக்கு 11 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, ஜப்பானிய மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும், மாவட்டநிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார களப்பணியாளர்களிடம் கொசு ஒழிப்பு தடுப்புப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *