தமிழகத்தில் இன்று (31.07.2023) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும், ஆகஸ்ட் 1 முதல் 5-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஜூலை 30-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி நீலகிரி மாவட்டம் கல்லட்டியில் மட்டும் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *