ஆடி மாதம் என்றாலே அத்தனை சிறப்புகள் நிறைந்தது. ஆடி மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த நாட்களுக்கு எல்லாம் மகுடமாக இருப்பது ஆடிப்பெருக்கு ஆகும். ஆடிப்பெருக்கு என்றால் ஆடி மாதம் 18-ம்தேதியை குறிக்கும். ஆடி மாதம் 18-ம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும் ஒரு பண்டிகையே ஆடிப்பெருக்கு ஆகும். ஆடிப்பெருக்கை ஆடி 18, பதினெட்டாம் பெருக்கு, ஆடி நோம்பி என்றும் மக்கள் அழைப்பார்கள்.
தமிழகத்தின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஆடிப்பெருக்கு உள்ளது. இந்நிலையில், இன்று ஆடிப்பெருக்கு என்பதால் மலர் சந்தையில் பூக்களின் விலை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை, திண்டுக்கல், தோவாளை, தூத்துக்குடி ஆகிய இடங்களின் மலர் சந்தையில் மல்லிகை, முல்லை, பிச்சிப்பூ ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப் பூ கிலோ ரூ.800-க்கு விற்பனையானது.
அதேபோல முல்லை பூ கிலோ ரூ.7,600, பிச்சிப்பூ கிலோ ரூ.700, கனகாம்பரம் கிலோ ரூ.500, செண்டு கிலோ ரூ.100, ரோஸ் கிலோ ரூ.250, செவ்வந்தி ரூ.280, அரளிப்பூ ரூ.200, மரிக்கொழுந்து ரூ.100, வாடாமல்லி ரூ.100, கோழிக்கொண்டை ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், ஆண்டிப்பட்டி மலர் சந்தையில், மல்லிகைப்பூ கிலோ ரூ.700-க்கும் விற்பனை செய்யப்பட்டது.