சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, நாளை முதல் வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 13-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் சாத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம், திருச்சி மாவட்டம் லால்குடி ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.