விபத்து மற்றும் விபத்து உயிரிழப்புகளைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தண்ணீர் லாரிகளுக்கான கட்டுப்பாடுகளைத் தீவிரமாக கடைபிடிக்க போக்குவரத்து போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை, கோவிலம்பாக்கத்தில் பள்ளிக்குச் செல்லும்போது தாயின் கண்முன்னே தண்ணீர் லாரி ஏறியதில் 5-ம் வகுப்பு மாணவி இரு தினங்களுக்கு முன் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுமட்டுமல்லாமல் சென்னையில் காலை, மாலை எனப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் தடையை மீறி தண்ணீர் லாரிகள் செல்வதால் அடிக்கடி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
எனவே, சென்னையில் விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் வாரியம் மற்றும் தனியார் தண்ணீர் லாரிகளை போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் இயக்குவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து நகருக்குள் தண்ணீர் லாரிகள் காலை சுமார் 7 முதல் 11 மணி வரையிலும், மாலை 5 முதல் 8 வரையும் நுழையக் கூடாது எனக் குடிநீர் வாரியம் மற்றும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களுக்கு சென்னை போக்குவரத்து போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.
இதைத் தீவிரமாக அமல்படுத்த போக்குவரத்து போலீஸாருக்கு அப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தவிர்க்க முடியாத சூழலில் தேவைக்குத் தகுந்தாற்போல அனுமதி வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.