தமிழகத்தில் பத்திரப் பதிவுத்துறை மூலம் மாநிலம் முழுவதும் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பை மாற்றி அமைக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு புதிய வழிகாட்டி மதிப்பு இந்த மாதமே அமலுக்கு வந்துள்ளது. எந்தெந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து பகுதிகளில் வழிகாட்டி மதிப்பு எவ்வளவு என்பது குறித்து அனைத்து பதிவாளர் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்க இருக்கின்றனர்.
அதன்படி, சென்னை மாநகராட்சி, கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு சதுர அடிக்கு ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆவடி, தாம்பரம், காஞ்சிபுரம் மாநகராட்சிகளில் குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு ரூ.800 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், நாகர்கோவில் ஆகிய மாநகராட்சி பகதிகளில் குறைந்தபட்சம் சதுர அடிக்கு ரூ.700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, கரூர், வேலூர், திண்டுக்கல் மாநகராட்சிகளில் ரூ.600-ஆகவும் தூத்துக்குடி, தஞ்சாவூர், சிவகாசி, கும்பகோணம், மாநகராட்சி பகுதிகளில் ரூ.500-ஆகவும், கடலூர் மாநகராட்சி பகுதியில் ரூ.300-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி பகுதிகளில் சதுரஅடிக்கு ரூ.300 ஆகவும், பேரூராட்சி பகுதிகளில் ரூ.200 ஆகவும் நிர்ணயித்து உள்ளார்கள். அதே நேரம் காஞ்சிபுரம், திருநெல்வேலி, செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, மதுரை, சேலம், கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள கிராம பஞ்சாயத்து பகுதிகளில் வீட்டுமனைகளுக்கு சதுர அடிக்கு குறைந்தபட்சம் ரூ.100-ஆகவும் விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.5 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாவட்டங்களில் உள்ள கிராம பஞ்சாயத்து பகுதிகளில் வீட்டுமனைகளுக்கு சதுர அடிக்கு ரூ.50-ஆகவும், விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் ஆகவும் நிர்ணயித்து உள்ளார்கள். பத்திரப்பதிவு கட்டணம் 11 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.