போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதிச் சான்று வழங்க தனியார் பங்களிப்புடன் தானியங்கி சோதனை நிலையங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசின் உள்துறைச் செயலர் பி.அமுதா வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதிச் சான்றை 2024-ம் ஆண்டு அக்.1-ம் தேதி முதல் தானியங்கி சோதனை நிலையம் மூலமாக மட்டுமே பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், போக்குவரத்து வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்க தனியார் பங்களிப்பின் மூலமாக தானியங்கி சோதனை நிலையங்கள் அமைக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இதையொட்டி, சோதனை நிலையங்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள சில பரிந்துரைகளை முன்வைத்து, போக்குவரத்து ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதன்படி, செங்குன்றம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், வேலூர், திண்டிவனம், திண்டுக்கல், மதுரை தெற்கு உள்ளிட்ட 18 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தனியார் பங்களிப்புடன் தானியங்கி வாகன சோதனை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதற்கான டெண்டர், கட்டுமானம் உள்ளிட்ட பணிகளை தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி நிறுவனம் மேற்கொண்டு, 2024-ம் ஆண்டு செப்.30-ம் தேதிக்குள் 18 நிலையங்களையும் அமைப்பதற்கு அரசு அனுமதியளிக்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.