சென்னை மெட்ரோ ரயிலை இயக்குவதற்காக செய்யப்பட்ட இரண்டாவது கட்ட ஆய்வும் திருப்திகரமாக இருந்ததால் மெட்ரோ ரயிலை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன.

சென்னை மெட்ரோ ரயிலின் ஒரு பகுதியான கோயம்பேடு – ஆலந்தூர் இடையே சென்னை மெட்ரோ ரயில் இயக்கப்படுவதற்காக முதல்கட்ட ஆய்வு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன்பின்னர் தற்போது இரண்டாவது கட்ட ஆய்வும் நடத்தப்பட்டது. இந்த இரண்டு கட்ட ஆய்வுகளிலும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் குழு திருப்தி அடைந்ததால் கோயம்பேடு-ஆலந்தூர் வரை மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விரைவில் மெட்ரோ ரயில் சேவையின் தொடக்கவிழா நடைபெறும் என கூறப்படுகிறது.

திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை என இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட இந்த இரண்டாம் கட்ட ஆய்வில் ரயில் பாதைகள், ரயில் நிலையக் கட்டுமானங்கள், தொழில் நுட்ப வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு ரயில் நிலையத்துக்கும் சென்று முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்த ஆய்வில் பல்வேறு அம்சங்கள் குறித்தும் அப்போது மெட்ரோ ரயில் அதிகாரிகளுடன் பாதுகாப்புக் குழு விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் குழு நடத்திய இந்த ஆய்வுக்கு முன்னர் கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நேற்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில் மெட்ரோ ரயில் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஆணையர் மிட்டல் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏற்பட்டுள்ள ஒருசில குறைகளை இன்னும் 2 வாரத்துக்குள் சரி செய்துவிடுமாறு மிட்டல் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.

ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கை 10 முதல் 15 நாட்களுக்குள் மத்திய அரசிடமும் ரயில்வே துறையிடமும் சமர்ப்பிக்கப்படும். மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவது குறித்து நிர்வாகக் குழுவும் மத்திய அரசும் முடிவு செய்யும் என்றும் எஸ்.கே.மிட்டல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

English Summary : In the 2nd round of the Chennai Metro Rail completed the study.