வார விடுமுறை நாட்களை முன்னிட்டு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாரந்தோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சனிக்கிழமை (07.10.2023), ஞாயிற்றுக்கிழமை (08.10.2023) ஆகிய வார விடுமுறை தினங்களையொட்டி, வெள்ளிக்கிழமை (06.10.2023) தமிழகத்தின் முக்கிய பகுதிகளிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், பெங்களூரில் இருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 600 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுமட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை (08.10.2023) சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு பயணிகள் திரும்ப வசதியாக தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து சேவையை முன்பதிவு செய்து பொதுமக்கள் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.