தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக, அக்டோபர் மாத இறுதி வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தென்மேற்கு பருவக்காற்று விலகாத நிலையில், வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கேட்டபோது, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
பொதுவாக, ‘தென்மேற்கு பருவமழை தமிழக பகுதியில் விலகி இருக்க வேண்டும். கடலோர மாவட்டங்களில் கிழக்கு திசையில் இருந்து வீசும் தரைக்காற்று வலுப்பெற்று இருக்க வேண்டும். தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் பரவலாக மழை பெய்திருக்க வேண்டும்’ என்பன போன்ற நிகழ்வுகள் அடிப்படையில் தான் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவிக்கும்.
அக்டோபர் 13 முதல் 27-ம் தேதி வரையிலான நாட்களில் எப்போது பருவமழை தொடங்கினாலும் அது வழக்கமான நாளாகவே கருதப்படும். இன்னும் தென்மேற்கு பருவமழை விலகவில்லை. அதனால் இந்த ஆண்டு சற்று தாமதமாக, அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.