சென்னையில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்களை நவ.15-க்குள் பதிவு செய்யாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதிகள், https://tnswp.com என்ற இணையதளம் மூலமாகப் பதிவு செய்யலாம்.

அதில், அறக்கட்டளை பதிவுப் பத்திரம், சொந்தக் கட்டிடம் குறித்த தகவல் அல்லது வாடகை ஒப்பந்தப் பத்திரம், கட்டிட வரைபடம், கட்டிட உறுதிச் சான்று, தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்று, சுகாதாரச் சான்று ஆகிய ஆவணங்களுடன் அக்.30-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்யாத தனியார் விடுதி மற்றும் இல்ல நிர்வாகிகள் மீது சட்டப்படி காவல் துறையின் மூலம் வழக்குப்பதிவு செய்து அதிகபட்சமாக 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வரும் நவ.15-ம் தேதி மாலை 5 மணிவரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *