டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மெயின் தேர்வு வரும் மே மாதத்தின் முதல் வாரம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது இந்த தேர்வு ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் போன்ற உயர் பதவிகளில் காலியாக உள்ள 79 பதவிகளுக்காக கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவு கடந்த ஜனவரி 30ஆம் தேதி வெளியான நிலையில் அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு சுமார் 4,000 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

இந்த குரூப் 1 மெயின் தேர்வு வரும் மே மாதம் 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தாலும், முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு மெயின் தேர்வு எழுத இன்னும் ஹால் டிக்கெட் வழங்கும் பணி முடிவடையவில்லை.

எனவே, குரூப்-1 மெயின் தேர்வு தள்ளி வைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில், ‘குரூப்-1 முதன்மை தேர்வு மே மாதம் 2,3,4 தேதிகளில் சென்னை தேர்வு மையத்தில் நடப்பதாக இருந்தது. ஆனால் இந்த தேர்வு வரும் ஜூன் மாதம் 5,6,7 தேதிகளில் சென்னை தேர்வு மையத்தில் நடத்தப்படும்’ என அறிவித்துள்ளார்.

English Summary : TNPSC Group 1 Exam timetable rescheduled from May 1st week to June 1st week.