சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 6.40 மணிக்கு வந்த தொலைபேசி அழைப்பு ஒன்றில் பேசிய மர்ம நபர், தனது பெயர் முகம்மது சலாவூதின் என்றும், எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த வெடிகுண்டு சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறிவிட்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரயில் நிலைய போலீஸார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, எழும்பூர் ரயில் நிலையம் காவல்துறையினர்களின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு முழு உஷார் நிலைக்கு உட்படுத்தப்பட்டது. ரயில் நிலையத்துக்கு வந்த அனைத்து பயணிகளின் உடமைகளும் முழுமையாக சோதனை செய்யப்பட்டன.

சுமார் இரண்டு மணி நேர சோதனைக்கு பின்னர் எந்த வெடிப் பொருளும் கிடைக்காததால், அந்த தொலைபேசி அழைப்பு வதந்தியை பரப்பும் வகையில் வந்திருப்பதாக போலீஸார் முடிவு செய்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், அந்த அழைப்பில் பேசிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

English Summary: Bomb Threats makes big issue in Chennai Egmore Railway Station.