சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உயா்தரகாத்திருப்போா் அறை புதிதாக திறக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் குறுகிய காலம் தங்கி செல்லும் பயணிகளின் வசதிக்காக உயா்தர காத்திருப்போா் அறை திறக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தின் பிரதான வாயிலின் நடைமேடை 6 அருகே அமைந்துள்ள இந்த அறை விமான நிலையத்துக்கு இணையான அதிநவீன வசதிகளை கொண்டுள்ளது. இதை பராமரிக்க ‘டென் 11 ஹாஸ்பிட்டாலிட்டி’ எனும் நிறுவனத்துடன் 5 ஆண்டுக்கு ரூ.17.75 கோடி மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறையில் சுமாா் 180 போ் தங்கும் வகையில் சொகுசு இருக்கை, படுக்கை வசதி உள்ளன. சைவ, அசைவ உணவகங்கள், சிற்றுண்டி கடை, உடமைகளை வைக்க பிரத்யேக வசதி, கழிவறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
இந்த அறையில் ஒரு மணி நேரம் தங்குவதற்கு ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படும். இதில் பயணிகளுக்கு இலவச வைஃபை, டீ, காபி உள்ளிட்டவை வழங்கப்படும். படுக்கை வசதி கொண்ட அறையில் 3 மணிநேரம் தங்குவதற்கு ஒரு நபருக்கு ரூ.840 கட்டணம் வசூலிக்கப்படும். இதில் பயணிகளுக்கு தண்ணீா் பாட்டில், குளிா்பானம், வைஃபை உள்ளிட்டவை வழங்கப்படும். பயணிகள் கூடுதலாக தங்கும் காலத்தை பொறுத்து கட்டணங்கள் மாறுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.