விரல் ரேகை பதியாதவர்களின் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது என்று உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் ஹர் சகாய் மீனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி, பொது விநியோகத் திட்ட தரவுகளில் ஏற்கெனவே பதியப்பட்ட முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக, மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட பயனாளிகளின் விரல் ரேகையை சரிபார்க்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு எந்த இடையூறும் இன்றி, இப்பணியை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் ஓய்வாக இருக்கும்போதோ, பொருட்கள் வாங்க வரும்போதோ கைவிரல் ரேகை பதிவு மூலம் புதுப்பிக்க கூறப்பட்டு கடந்த அக்டோபர் முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது.
இதுவரை 63 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. மீதமுள்ள அட்டைதாரர்களுக்கும் சரிபார்க்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது. குடும்ப அட்டைதாரர்கள் அவரவர் வசதிக்கேற்ப விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இல்லையெனில், இதற்கென தனி முகாம்கள் நடத்தவும், தேவைப்பட்டால் வீட்டுக்கே சென்று புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். குடும்ப அட்டைகள் ஏதும் ரத்து செய்யப்படாது. கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்கள் பெயர்களும் நீக்கப்படாது. வெள்ளைத் தாளில் சுய விவரங்கள் ஏதும் தரவேண்டியதில்லை. மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.