நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பல சாதனைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம். மாநிலத்தின் முதல் இடத்தை 41 மாணவர்கள் பிடித்துள்ளதும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அறிவியலில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றதும் இந்த தேர்வின் சாதனைகளாக கருதப்படுகிறது. இந்நிலையில் சென்னை புழல் சிறையில் தண்டனை பெற்று வரும் 70 கைதிகள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் தண்டனை கைதிகளாக இருக்கும் 36 பேர், விசாரணை கைதிகளாக இருக்கும் 9 பேர், வேலூர் சிறையில் உள்ள கைதிகள் 11 பேர், வேலூர் மகளிர் சிறையில் 3 பேர், கடலூர் சிறையில் உள்ள 14 பேர் என 73 பேர் 10ம் வகுப்பு தேர்வை எழுதினர். இதில், 70 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தண்டனை கைதிகள் 2 பேர்களும், விசாரணை கைதி ஒருவரும் தேர்வில் தோல்வி அடைந்தனர்.

மேலும் கொலை வழக்கில் கைதாகி தண்டனை அனுபவித்து வரும் ஜாகீர்உசேன் என்பவர் 417 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தண்டனை கைதி முத்து செல்வன் 409 மதிப்பெண்களும், அனூப் என்பவர் 407 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்ற கைதிகளுக்கு சிறைத்துறை தலைவர் திரிபாதி, தலைமை இடத்து துணை தலைவர் மவுரியா, புழல் மத்திய சிறை துணை தலைவர் ராஜேந்திரன், சிறை கண்காணிப்பாளர் அன்பழகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

English Summary : 73 prisoners wrote 10th exam from Chennai puzhal Jail. 70 prisoners passed and created a history.