சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதய நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை இன்றி “இஇசிபி” என்ற நவீன புதிய சிகிச்சை முறை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சிகிச்சை முறையை மருத்துவமனையின் டீன் நாராயணபாபு தொடங்கி வைத்தார்.
தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஆர். நாராயணபாபு செய்தியாளர்களிடம் கூறியபோது, “பொதுவாக, ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டால் மருந்து, மாத்திரைகளோ அல்லது பை-பாஸ், பலூன் ஆஞ்சியோ பிளாஸ்டிக் சர்ஜரி மூலமோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது ‘’இஇசிபி’’ என்ற நவீன சிகிச்சை முறை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் சென்னை அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையை தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது, இதய பலகீன நோயாளிகள், தீராத நெஞ்சுவலி உள்ளவர்கள், இதய செயல் குறைபாட்டினால் ஏற்படும் மூச்சுத்திணறல் உள்ளவர்கள், அறுவை சிகிச்சைக்கு பயப்படுபவர்கள், ஆகியவர்களுக்காக கொண்டு வரப்பட்ட நவீன சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சை மூலம் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யாமல், நோயாளிகள் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இந்த சிகிச்சை தினமும் ஒரு மணி நேரம் வீதம் தொடர்ந்து 35 நாட்களுக்கு அளிக்கப்படும்.
இந்த நவீன சிகிச்சை மூலம் ரத்த குழாய் அடைப்பை சுற்றி புதிய நுண்ணிய ரத்த குழாய்களை ஏற்படுத்தி, அதன் மூலம் இதய தசைகளுக்கு தேவையான ரத்தத்தை செலுத்த முடியும். இந்த முறையில் 3 பட்டைகளை கால்களில் குறிப்பிட்ட இடங்களில் கட்டி அவற்றை மாறி,மாறி இயந்திரங்களின் மூலம் செயல்பட வைத்து, இதயத்திற்கு தேவையான ரத்தத்தை செலுத்துகிறோம். சிகிச்சையின்போது நோயாளிக்கு வலி எதுவும் ஏற்படாது. இச்சிகிச்சையால் இதயம் புத்துயிர் பெற்று நெஞ்சுவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. குணமான பின்பு, நீண்ட தூரம் நடக்கலாம். கனமான பொருட்களை தூக்கலாம். சிரமம் இல்லாமல் மாடிப்படி கூட ஏறி இறங்கலாம்’ என்று கூறினார்.
இந்த பேட்டியின்போது இதய சிகிச்சை நிபுணர் ராமச்சந்திரன், மருத்துவ துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு உடனிருந்தனர்.
English Summary : The introduction of modern treatment of heart patients in the hospital Kilpauk.