தமிழகத்தில் 24 மணி நேரமும் தேசிய கொடிகள் பறக்கும் இடங்களாக ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடம், தாம்பரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரி ஆகிய இடங்கள் உள்ள நிலையில் மூன்றாவது இடமாக தற்போது சென்னை விமான நிலையம் அமைந்துள்ளது.
தேசிய கொடிகள் பொதுவாக காலையில் ஏற்றப்பட்டு பின்னர் மாலை 6 மணிக்கு இறக்கப்படும். ஆனால் இரவிலும் தேசிய கொடிகள் பறப்பதற்கு சில இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர், தாம்பரத்தை அடுத்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 24 மணி நேரமும் தேசிய கொடி பறக்க மத்திய அரசு தற்போது அனுமதித்துள்ளதால், இங்கு 100 அடி உயரத்திற்கு கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கம்பத்தில் 30 அடி அகலமும், 20 அடி உயரமும் கொண்ட பிரமாண்டமான மூவர்ண தேசிய கொடியை விமான நிலைய இயக்குனர் தீபக் சாஸ்திரி நேற்று ஏற்றிவைத்தார். இந்த தேசிய கொடி பகல் மற்றும் இரவு என 24 மணி நேரமும் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து விமான நிலைய இயக்குனர் தீபக் சாஸ்திரி கூறியதாவது: இந்தியாவில் 78 இடங்களில் இரவு-பகல் என 24 மணி நேரமும் பறக்கும் வகையில் தேசிய கொடி அமைக்கப்பட்டு உள்ளது. கொல்கத்தா, கவுகாத்தி, வாரணாசி, ஜம்மு, ஸ்ரீநகர், ஆமதாபாத் ஆகிய விமான நிலையங்களில் இதுபோல் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டு உள்ளன. 7வது விமான நிலையமாக சென்னை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் பறக்கக் கூடியவகையில் இந்த தேசிய கொடிக் கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. தேசிய கொடி ஏற்றும், இறக்கும் பணிகள் தானியங்கி கருவிகள் மூலம் செயல்படுத்தப்படும். தேசிய கொடி சேதம் அடையாத வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
English Summary : Chennai Airport has become 3rd place to hoist National Flag for 24 hours in Chennai.