இவ்வருடம் பிளஸ் 2 முடித்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவம், எஞ்சினியரிங் போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்வதை விட கலைக்கல்லூரிகளில் அதிகளவில் விண்ணப்பம் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் வேளாண் பட்டப்படிப்பு படிக்கவும் அதிக மாணவர்கள் இவ்வருடம் முன்வந்துள்ளதாக வேளாண்மைத் துறை இயக்குநர் எம்.ராஜேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

“விவசாயத்தில் இளைஞர்கள்” என்ற 2 நாள் பயிலரங்கை தொடங்கி வைத்த தமிழக வேளாண்மைத் துறை இயக்குநர் எம்.ராஜேந்திரன் பேசும்போது, “வேளாண்மைப் பட்டப்படிப்பு தற்போது இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இளைஞர்களிடம் இந்தப் படிப்புக்கு உள்ள வரவேற்பையே இதுகாட்டுகிறது. இளைஞர்களை அதிகம் கொண்ட இந்தியாவில் இது வரவேற்கத்தக்கது.

விவசாயிகள் தங்களது தொழிலை ஒருங்கிணைத்து செயல்படுத்தும்போது, அதிக லாபம் ஈட்டமுடியும். மதிப்புக் கூட்டுதலுடம் சந்தைத் தொழில்நுட்பமும் சேரும்போது, விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறது. எனவே, விவசாயிகள் தங்களது விவசாயத் திட்டத்தை ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தவேண்டும்” என்று பேசினார்.

திருச்சியில் நடைபெற்ற இந்த பயிலரங்கில் 28 மாவட்டங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.ராமசாமி, தோட்டக்கலைத் துறை இயக்குநர் சித்திரசேனன் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

English Summary: Students are interested to join in Agriculture more than in Engineering Departments.