கடந்த 1971ஆம் ஆண்டு முதல் கோவை நகரில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மொத்தம் 13 இளம் அறிவியல், இளம் தொழில் நுட்ப படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றது. இந்த பல்கலைக்கழகத்தில் மேற்படி படிப்புகளுக்காக முதல் கட்ட கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதில் 1,326 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலானவர்கள் பெண்களே என வேளாண்மை பல்கலைக்கழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்த பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் 13 இளம் அறிவியல் மற்றும் இளம் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளில் மொத்தமுள்ள 2,340 இடங்களுக்கு 29,947 மாணவ, மாணவிகள் விண்ணப்பம் செய்திருந்தனர். கடந்த மாதம் 27ஆம் தேதி தர வரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது.

முதல் கட்டமாக, சிறப்புப் பிரிவினருக்காக கலந்தாய்வு கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. இதில் 32 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பொதுப் பிரிவினருக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த ஜூன் 29-ம் தேதி தொடங்கியது. கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் 9 நாட்கள் நடைபெற்ற இந்த கலந்தாய்வு நேற்றுடன் முடிவு பெற்றது. நாள் ஒன்றுக்கு சுமார் 400 முதல் 450 பேர் என மொத்தம் 3,300 பேருக்கு முதல் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இறுதியாக பல்வேறு படிப்புகளுக்காக மொத்தம் 1,326 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வேளாண் பல்கலைக்கழக முதல்வர் மகிமைராஜா அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, “1,461 இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வில், இதுவரை 1,326 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் 135 இடங்கள் காலியாக உள்ளன. காத்திருப்போர் பட்டியலில் 326 மாணவர்கள் உள்ளனர். வரும் 13ஆம் தேதி வரை மாணவர்கள், தங்களது இடங்களை உறுதி செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 18ஆம் தேதி முதல் 2ஆம் கட்ட கலந்தாய்வு தொடங்க உள்ளது. காலி இடங்களுக்கு ஏற்ப அந்த கலந்தாய்வு நடத்தப்படும்’ என்று கூறினார்.

முதல் கட்ட கலந்தாய்வில், மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் ஆர்வத்துடன் கலந்துகொண்டுள்ளதாகவும், இளம் அறிவியல் வேளாண்மை, இளம் அறிவியல் தோட்டக்கலை ஆகிய துறைகளுக்கு மாணவிகளின் மத்தியில் அதிக ஆர்வம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

English Summary : 1,326 students are selected at the end of First discussion in Agricultural University.