சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் சேவை கடந்த ஜூன் மாதம் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை இயங்கி வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிலையங்களின் பாதுகாப்புக்கென தமிழக காவல்துறையின் சார்பில் தனி காவல்நிலையங்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் மெட்ரோ ரெயில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக பவானீஸ்வரி, கோயம்பேடு பணிமனையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். உலகதரத்துக்கு மெட்ரோ ரயில் நிலையங்கள் பாதுகாக்கபடும் என அவர் உறுதி அளித்துள்ளார்.
மெட்ரோ ரயில் போக்குவரத்தில் பயணிகளுக்கான பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக, தமிழக அரசு ‘கியூ’ பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றி வந்த பவானீஸ்வரி என்ற அதிகாரியை மெட்ரோ ரெயில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக சமீபத்தில் நியமனம் செய்தது. இவர் நேற்று பகல் 12.15 மணி அளவில் கோயம்பேட்டில் உள்ள சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
பின்னர் பவானீஸ்வரி, நிருபர்களிடம் கூறியதாவது: மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு தலைமை பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது கோயம்பேடு, கோயம்பேடு பஸ் நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 ரெயில் நிலையங்களில் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.
இந்த 7 ரெயில் நிலையங்களிலும் போலீஸ் நிலையங்கள் அமைப்பதா?, ஒரு ரெயில் நிலையத்துக்கு எவ்வளவு போலீசாரை நியமிப்பது?, மெட்ரோ ரெயில் சேவை நவீன வசதிகளுடன் செயல்படுத்தப்படுவதால் பயணிகளுக்கு எந்தவகையில் பாதுகாப்பு மற்றும் உதவிகள் செய்வது?, பயணிகள் பாதுகாப்பில் குறை இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை தெரிவிப்பது போன்ற பல்வேறு கருத்துகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் ஓரிரு நாட்களில் பேசி முடிவு செய்யப்படும். சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு உலகத்தில் எங்கும் இல்லாத வகையில் பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:Metro Chief Safety officer appointed for Bhavaneeswari.