நாட்டு மக்கள் அனைவருக்கும் அத்தியாவசிய தேவை என கருதப்படும் ‘ஆதார் அட்டை’ வழங்குதல் பணிகளில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் உள்பட திருத்தங்கள் செய்ய விரும்புபவர்களுக்கு விரைவில் இ-சேவை மையங்கள் வசதி அமைத்து தரப்படும் என அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குநர் குமரகுருபரன் அவர்கள் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குமரகுருபரன் கூறியதாவது:
அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் தலைமைச் செயலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையகம், மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள், 50 கோட்ட அலுவலகங்கள், மதுரை மற்றும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என தமிழகத்தில் 333 இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், வட்டாட்சியர் அலுவலகங்கள், தலைமைச் செயலகம், மாநகராட்சி தலைமை அலுவலகம், மண்டல அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆதார் அட்டைக்கு ஏற்கெனவே விண்ணப்பித்து கருவிழி மற்றும் கைரேகை பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற்றவர்கள், அதைக் காட்டி, ரூ.40 செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறலாம். ஏற்கெனவே ஆதார் எண் பெற்றவர்கள், ரூ.30 செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறலாம். தமிழகத்தில் 76,072 பேர் இ-சேவை மையங்கள் மூலம் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுள்ளனர். அதிகபட்சமாக திருச்சியில் 7,806 பேரும், சென்னையில் 4,063 பேரும் குறைந்த பட்சமாக அரியலூரில் 753 பேரும் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுள்ளனர்.
மேலும், ஆதார் அட்டையில் முகவரி, தொலைபேசி எண் மாற்றம் போன்ற திருத்தங்களை செய்வதற்கான வசதிகள் இ-சேவை மையங்களில் விரைவில் அளிக்கப்படும். பாஸ்போர்ட் விண்ணப்பத்துக்கான பணிகள் மற்றும் அரசு கேபிள் டிவி இணைப்பு மூலம் இணையதள வசதி விரைவில் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
English Summary : Government Cable TV company managing director Mr.Kumarakuruparan has announced E-service camps for Changes in Aadhar card will be placed.