cell-phoneமொபைல் போன்களில் இண்டர்நெட் சேவையை பெறவும், துண்டிக்கவும் புதிய வசதியை செல்போன் நிறுவனங்கள் ஏற்படுத்தி தர வேண்டும் என டிராய் உத்தரவிட்டு உள்ளது.

செல்போனில் இணையதள சேவையை பெறவும், துண்டிக்கவும் செல்போன் சேவை நிறுவனங்கள் சிக்கலான நடைமுறைகளை வைத்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, டிராய் என்று அழைக்கப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நேற்று புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதன்படி செல்போன் சந்தாதாரர்கள் இனிமேல் தங்கள் செல்போன்களில் இணையதள சேவையை பெறுவதற்கோ அல்லது நீக்குவதற்கோ 1925 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு மூலமாகவோ, எஸ்.எம்.எஸ். மூலமாகவோ தெரிவித்தால் போதும். இந்த வசதி, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. அன்று முதல் இந்த கட்டணமில்லா தொலைபேசி வசதியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அனைத்து செல்போன் சேவை நிறுவனங்களுக்கும் ‘டிராய்’ உத்தரவிட்டுள்ளது.

இதேபோல், எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்புவதாக இருந்தால், இணையதள சேவையை ‘ஆக்டிவேட்’ செய்வதற்கு ‘ஸ்டார்ட்’ என்றும், ‘டிஆக்டிவேட்’ செய்வதற்கு ‘ஸ்டாப்’ என்றும் டைப் செய்து அனுப்ப வேண்டும். அதற்கு சேவை நிறுவனங்கள் உடனடியாக பதில் அளிக்க வேண்டும்.

மேலும், இணையதள சேவையின் பயன்பாட்டு கால அளவு முடிவடைந்தது தெரியாமல் உபயோகிக்கும் சந்தாதாரர்களுக்கு செல்போன் சேவை நிறுவனங்கள், கணிசமான அளவில் பணம் பெறுவதாக வந்த புகாரை அடுத்து, பயன்பாட்டு காலத்துக்கு மேல் உபயோகிப்பவர்களிடம், அவர்களின் சம்மதத்தைப் பெறாமல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும் ‘டிராய்’ உத்தரவிட்டுள்ளது. மேலும், இணையதள டேட்டா கார்டின் பயன்பாட்டு காலம் முடிவடையப் போவதை சந்தாதாரர்களுக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் செல்போனில் இணணயதள சேவையை பயன்படுத்துபவர்கள் நிம்மதி அடைவார்கள் என செல்போன் உபயோகிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

English Summary:To get cell phone service to the Internet, disconnect the new facility since September -1