376 வருடங்கள் பாரம்பரிய மிக்க சென்னை மாநகரில் பாரம்பரியமான கட்டிடங்கள், சுற்றுலா ஸ்தலங்கள் ஆகியவைகள் அதிகம் இருப்பதோடு பாரம்பரியம் மிக்க வாகனங்களும் குறிப்பாக பழைய காலத்து கார்களும் அதிகம் உள்ளது. தற்போது சென்னை தினத்தை சென்னை வாரமாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிற வேளையில் பாரம்பரியமிக்க அரிய வகை கார்கள்-மோட்டார் சைக்கிள்கள் பங்கேற்கும் அணிவகுப்பு வரும் 30ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சென்னை பாரம்பரிய வாகன கிளப் செயலாளர் வி.எஸ்.கைலாஷ் சமீபத்தில் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் அந்த பேட்டியில் கூறியதாவது: “எங்களது கிளப் சார்பில் பழமையான பாரம்பரியமிக்க அரிய வகை கார்கள்-மோட்டார் சைக்கிள்கள் பங்கேற்கும் அணிவகுப்பு ஆகஸ்ட் 30ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் 130 வகையான கார்கள், 60-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பங்கேற்க உள்ளன.

இதனை கொரிய தூதரக அதிகாரி கியூன்சு கிம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். சென்னை எழும்பூர் ஸ்பர் டேங்க் சாலை, கல்லூரி சாலை, பாந்தியன் சாலை வழியாக சென்று டான் போஸ்கோ பள்ளி மைதானத்தில் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக கார்கள் நிறுத்தப்படும். பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்கும் காருக்கு விருதுகள், பரிசுகள் வழங்கப்படும்.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு பழமைவாய்ந்த கார்கள் பங்கேற்ற அணிவகுப்பு நடைபெற்றது. இதில் 60-க்கும் மேற்பட்ட கார்கள் பங்கேற்று, 300 கி.மீ. தூரத்துக்கும் அதிகமான தூரம் ஓட்டினோம். அணிவகுப்பில் பங்கேற்ற கார்கள் தடைகள் எதுவும் இன்றி பேரணியில் பங்கேற்றது குறிப்பிடதக்கது. 7 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் பழமையான கார்களை பார்வையிடுவதற்கு மிகவும் ஆவலாக இருக்கின்றனர். பாரம்பரியமிக்க கார்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதற்காக நாங்கள் பாதுகாத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின்போது சென்னை பாரம்பரிய வாகன கிளப்பின் உறுப்பினர் ரஞ்சித் பிரதாப், விவாந்தா தாஜ் கன்னிமாரா ஓட்டலின் பொதுமேலாளர் அக்மர் சித்திகி, உதவி இயக்குனர் (விற்பனை) பாரத் ஸ்வரூப் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக தாஜ் கன்னிமாரா ஓட்டல் வளாகத்தில் அணிவகுப்பில் பங்கேற்க உள்ள ‘செவ்ரோலெட் பிளீட் மாஸ்டர்’, ‘பக் பியாட்’, ‘ஆஸ்டின் சும்மி’, ‘ஆஸ்டின் 16’, ‘டாட்ஜ் பிரதர்ஸ்’, ‘எம்.ஜி.டி.பி.’, ‘பிளைமவுத் சவோய்’ உள்ளிட்ட பல்வேறு வகையான பழமைவாய்ந்த கார்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இளம்பெண்கள், இளைஞர்கள் கார்களின் அருகே நின்று புகைப்படமும், ‘செல்பி’யும் எடுத்து மகிழ்ந்தனர். சிலர் கார்களை தொட்டு ரசிப்பதையே பெருமையாக கருதினர். இதனையடுத்து சென்னை பாரம்பரிய வாகன கிளப்பை சேர்ந்தவர்கள் ஆதரவற்ற குழந்தைகளை காரில் ஏற்றி வலம் வந்தனர்.

English Summary : Parade of antique traditional cars is to be conducted in Chennai on 30th of this month.