சுற்றுச்சூழலால் ஏற்படும் மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த காலால் ஓவியம் வரைந்த சென்னை மாணவிக்கு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறக்கூடிய கிடைத்துள்ளது.
சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம் பகுதியைச் சேந்த ரமேஷ்பாபு- ஆண்டாள் தம்பதியினர் மகள் காவியா, அம்பத்தூர், புதூர் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வமுடைய காவியா, பெருகி வரும் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க அவர் ஒரு வண்ண ஓவியத்தை காலால் வரைய முடிவு செய்தார். அத்துடன் அதை கின்னஸ் சாதனையாக பதிவு செய்யவும் அவர் விரும்பினார்.
இதன்படி, தான் படிக்கும் பள்ளி வளாகத்தில் கடந்த இரு நாட்களாக 100 சதுர மீட்டர் பரப்பளவில், காலால் சுற்றுச்சூழல் மாசுபடுவது குறித்து ஓவியம் வரைந்தார். அதில், கடல் நீர் எவ்வாறு மாசுபடுகிறது, தொழிற்சாலைகளிலிருந்து வெளி யேறும் புகை மற்றும் கழிவுகள், குடியிருப்புகளால் கொட்டப்படும் குப்பைகள், ஒலி பெருக்கியினால் ஏற்பாடும் ஒலி மாசு போன்றவற்றை விரிவாக விளக்கும் வகையில் ஓவியங்கள் வரைந்துள்ளார்.
மரம் வளர்ப்போம்.. சுற்றுச் சூழலை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் அவரது ஓவியங்கள் அமைந்துள்ளது. இந்த ஓவியங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததாகவும், இந்த கின்னஸ் சாதனை முயற்சியை, கின்னஸ் நிறுவன பிரதிநிதிகள், வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவு செய்து, எடுத்துச் சென்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. விரைவில் காவ்யாவின் ஓவியம் கின்னஸ் சாதனை புத்தககத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary:Guinness record attempt she made to protect the environment Chennai.