iasயூ.பி.எஸ்.சி. என்று கூறப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் நேற்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் சென்னையில் 50 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்வு எழுதியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மத்திய பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) சார்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.எப்.எஸ். உள்ளிட்ட 24 வகையான உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் போட்டி தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இவ்வருடம் 1,129 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு கடந்த கடைசி தேதியாக ஜூன் மாதம் 19 என அறிவிக்கப்பட்டிருந்ததால், அதற்குள் நாடு முழுவதும் மொத்தம் 9.45 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்தவர்களில் 25 சதவீதத்திற்கு மேல் என்ஜினீயரிங் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கான எழுத்து தேர்வு நாடு முழுவதும் 71 நகரங்களில் உள்ள 2 ஆயிரம் தேர்வு மையங்களில் நேற்று நடந்தது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தமிழகம் முழுவதும் 45 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். சென்னையில் தேர்வு எழுத 32 ஆயிரத்து 732 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 50 சதவீதத்துக்கும் குறைவானவர்களே அதாவது 15 ஆயிரத்து 751 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்வு காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், பகல் 2.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரையிலும் 2 பிரிவுகளாக பிரித்து தேர்வுகள் நடந்தது. காலையில் 200 மதிப்பெண்ணுக்கு 100 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. மாலையில் 80 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு கேள்விக்கும் 2½ மதிப்பெண் ஆகும். மொத்தம் காலையிலும், மாலையிலும் சேர்த்து 400 மதிப்பெண் ஆகும். தேர்வு மையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. செல்போன், கால்குலேட்டர் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு கூடத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மாலையில் நடத்தப்பட்ட ‘சி சாட்’ தேர்வு இந்த வருடம் முதல் தகுதி தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது குறைந்த பட்சம் 33 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும். அதற்கு மேல் மதிப்பெண் எடுத்தால் அந்த மதிப்பெண் தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படாது.

முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மெயின் தேர்வு எழுத தகுதி படைத்தவர்கள் என்ற நிலையில் முதல் நிலை தேர்வில் கலந்து கொள்ளாதவர்கள் மெயின் தேர்வு எழுத தகுதியற்றவர்களாக ஆகியுள்ளனர். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் டெல்லியில் நடைபெறும் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மெயின் தேர்வில் எடுத்த மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண் இரண்டையும் கூட்டி இடஒதுக்கீடு பார்த்து இறுதியாக தேர்ந்து எடுத்தவர் பட்டியல் வெளியிடப்படுகிறது என்று அதிகாரிகள் கூறினர்.

English Summary:IAS and IPS Exam.50 Percentage Of Applicants apcent in chennai.