சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ‘இல்லந்தோறும் இணையம்’ என்ற திட்டத்தை தமிழகத்தில் விரைவில் அமல்படுத்தவுள்ளதாக அறிவித்தார். இதனை அடுத்து இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த விரும்பும் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், கேபிள் டிவி நிறுவன இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண்மை இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் “இல்லந்தோறும் இணையம்” என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து இல்லங்களுக்கும் குறைந்த செலவில் தரமான இணைய இணைப்புகளை வழங்கிடும் என்றும், அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் மற்றும் இதர இணைய சேவைகள் ஆகியவற்றுடன் சேர்த்து, புதிதாக இணைய வழி தொலைக்காட்சி சேவைகளும் (Internet Protocol Television – IPTV) வழங்கப்படும் என்றும் கடந்த மாதம் 14-ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுடன் இணைந்து மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அகண்ட அலைவரிசை சேவைகள் மற்றும் இதர இணைய சேவைகள் வழங்குவதற்கான உரிமத்தை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த விரும்பும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள், தங்களது விருப்பத்தை இந்த நிறுவனத்தின் www.tactv.in என்ற வலைதளத்தில் உள்நுழைவு (Log-in) செய்து, இணையதள சேவைகள் என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்ய வேண்டும். வரும் 5-ம் தேதி காலை 10 மணி முதல் 20-ம் தேதி வரை மாலை 5 மணி வரை இப்பதிவினை செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary : “Home Internet” program in TamilNadu through cable TV operators.