இளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் கடந்த 1ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸான நிலையில், ரிலீஸுக்கு முந்தைய நாள் திடீரென விஜய் உள்பட ‘புலி’ படக்குழுவினர்களின் வீடுகளில் அதிரடியாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் ரொக்கம், நகைகள் மற்றும் தஸ்தேவேஜ்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் நடிகர் விஜய் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒழுங்காக வருமான வரி கட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த குற்றச்சாட்டுக்கு நடிகர் விஜய் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
வருமான வரித்துறையினர் கலை உலகைச் சார்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் சோதனையிடுவதும், தணிக்கை செய்வதும் இயல்பான ஒன்று. கடந்த வாரம் என்னுடைய இல்லத்திலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் நான் வருமான வரி ஏய்ப்பு ஏதும் செய்துள்ளேனா என்று சோதனையிட்டார்கள்.
நானும், எனது குடும்பத்தாரும், எனது அலுவலர்களும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். ஆனால் சில பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் நான் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்று உண்மைக்கு புறம்பான செய்தியை கூறியுள்ளதை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
மேற்படி செய்தியில் சிறிதளவும் உண்மையில்லை. நான் சட்டத்தை மதித்து நடப்பவன். என்றும் சட்டத்துக்கு மரியாதை கொடுப்பவன். நடப்பு நிதியாண்டு வரை நான் என்னுடைய தொழில் மற்றும் வருமானம் சம்பந்தப்பட்ட கணக்கினைக் குறித்த நேரத்தில் வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்து, அதற்குரிய வருமான வரியையும், சொத்து வரியையும், தொழில் வரியையும் முறையாக செலுத்தியுள்ளேன் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.
மேலும் நான் எப்பொழுதும் வருமான வரித்துறைக்கு முழு ஒத்துழைப்பும் தருவேன். எனவே உண்மைக்கு புறம்பான தேவையற்ற வீண் கருத்துகளை செய்தித்தாள்களிலோ, ஊடகங்களிலோ வெளியிட்டு என் மனதைப் புண்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு விஜய் தனது அறிக்கையில் கூறியுள்ளார். விஜய்யின் விளக்க அறிக்கையை அடுத்து இந்த பிரச்சனைக்கு முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
English Summary : Vijay said that he is respecting the law and paid his taxes correctly.