கடந்த 1995-96ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. பின்னர் தொழில்நுட்பம் வளர்ந்த பின்னர் தற்போது பாஸ்போர்ட்டுகள் கம்ப்யூட்டர் மூலம் பிரிண்ட் செய்து கொடுக்கப்படுகின்றது. இந்நிலையில் உலகில் உள்ள அனைத்து நாட்டு விமான நிலையங்களிலும் கையால் எழுதப்பட்ட பழைய பாஸ்போர்ட்டுக்கலை திரும்ப பெற வேண்டும் என்றும் வரும் ஆண்டுகளில் இருந்து எந்திரங்களே சரிபார்க்கும் பாஸ்போர்ட்டு வைத்திருப்பவர்களை மட்டுமே வெளிநாட்டுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் அகில உலக விமான அமைப்பு (ஐ.சி.ஏ.ஓ.) உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே கையால் எழுதப்பட்ட பழைய பாஸ்போர்ட்டுகள் வரும் நவம்பர் 24-ந்தேதிக்குள் அனைவரும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் கையால் எழுதப்பட்ட பழைய பாஸ்போர்ட்டுக்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் வழங்கிவிட்டு புதிய பாஸ்போர்ட்டுகளை பெற்றுக் கொள்ளுமாறும் இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
இதற்கான பணிகளில் சென்னை மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகம் போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அத்துடன் வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் பாஸ்போர்ட்டுகள் புதுப்பிக்கும் காலம் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு மேல் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் கூறும்போது, ‘மேலும் பாஸ்போர்ட்டுக்களை புதுப்பிக்கும் காலம் 20 ஆண்டுகள் இருக்கும் பாஸ்போர்ட்டுகளையும் மாற்றி 10 ஆண்டுகள் புதுப்பிக்கும் வகையிலான பாஸ்போர்ட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் தாங்கள் வைத்திருக்கும் சாதாரண வகை பாஸ்போர்ட்டுகளை, பாஸ்போர்ட்டு அலுவலகங்களில் வழங்கிவிட்டு 64 பக்கங்கள் கொண்ட ‘ஜம்போ’ என்று கூறப்படும் புதியவகை பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொள்ளும் வசதியும் தற்போது உள்ளது.
வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்வது மற்றும் அவசரமான வேலைகளுக்கு செல்வதாக இருந்தால் மட்டுமே ‘தட்கல்’ முறையில் ‘பாஸ்போர்ட்’ கேட்டு, பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற நேரங்களில் ‘தட்கல்’ மூலம் விண்ணப்பித்து ’பாஸ்போர்ட்டு’களை பெறுவதை தவிர்த்துக் கொள்ளலாம். காரணம் ‘தட்கல்’ மூலம் விண்ணப்பித்தால் போலீஸ் விசாரணை எதுவும் இல்லாமல் உடனடியாக ‘பாஸ்போர்ட்டு’கள் வழங்கப்படுகிறது.
பின்னர் போலீஸ் விசாரணையில் ‘தட்கல்’ ‘பாஸ்போர்ட்டு’ விண்ணப்பத்தில் தவறான தகவல்கள் இருப்பது கண்டறியப்பட்டால் தேவையில்லாமல் நடவடிக்கை எடுக்க நேரிடும். இதனை தவிர்க்க சாதாரண வகையில் ‘பாஸ்போர்ட்டு’ கேட்டு விண்ணப்பிக்கலாம். ‘தட்கல்’ முறையில் விண்ணப்பிப்பவர்களுக்கு 3 நாட்களிலும், சாதாரண வகையில் விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களிலும் ‘பாஸ்போர்ட்டு’ வழங்கப்பட்டு வருகிறது.
English Summary:Is the End of the Old Handwritten Passport.