manjaசென்னை நகரில் மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டங்கள் பறக்க விடுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. சமீபத்தில் சென்னையை சேர்ந்த 5 வயது சிறுவன் தனது பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது மாஞ்சா நூல் அறுக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்நிலையில் மாஞ்சா நூலுக்கு எதிரான நடவடிக்கைகளை சென்னை காவல்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.

மாஞ்சா நூல் விற்பனை செய்தாலோ அல்லது மாஞ்சா நூலில் பட்டம் செய்து விட்டாலோ 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், சென்னையில் இன்று முதல் 60 நாட்களுக்கு மாஞ்சா நூல் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மாஞ்சா நூல் தொடர்பான புகார்களை தெரிவிப்பற்காக 044 – 2561 5086 என்ற சிறப்பு எண் வசதியும் செய்யப்பட்டுள்ளதாகவும், மாஞ்சால் நூல் பயன்படுத்தி பட்டம் விடுபவர்கள் குறித்தோ அல்லது தடையை மீறி மாஞ்சா நூலை விற்பவர்கள் குறித்தோ தகவல் தெரிந்தால் உடனே மேற்கண்ட தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கும்படி சென்னை நகர மக்களை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

English Summary:60 days Prohibited in Manja thread in Chennai.Commissioner George directive.