A.-R.-Rahman-28102015பாலிவுட் திரையுலகின் முன்னணி பாடகிகளான லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே சகோதரிகளின் உடன்பிறந்த சகோதரர் பண்டிட் ஹிருதயநாத் மங்கேஷ்கர் அவர்களின் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் இசையுலகில் சாதனை புரிபவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டிற்கான விருதை ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் பெற்றுள்ளார். இவருக்கு முன்னர் இந்த விருதினை பாடகிகள் லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, நடிகர் அமிதாப் பச்சன், பழம்பெரும் இந்தி நடிகை சுலோச்சனா ஆகியோர்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் மும்பையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில் பாலிவுட்டின் பிரபல இயக்குனர் சுபாஷ் கய் அவர்கள் இந்த விருதினை ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு வழங்கினார். ரஹ்மானுக்கு விருதினை வழங்கிய பின்னர் பேசிய சுபாஷ் கய், “இசைக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்த ஏ.ஆர். ரகுமானால் இந்த நாடு மிகவும் பெருமையடைந்துள்ளது. அவருக்கு இந்தியோ, பஞ்சாபி மொழியோ தெரியாது. ஆனால் 70 இரவுகள் கடுமையாக உழைத்து எனது ‘தால்’ படத்துக்கு இசையமைத்ததன் மூலம், மிகத்திறமையான இசையமைப்பாளர் என்பதை ஏ.ஆர். ரகுமான் நிரூபித்துள்ளார்’ என்று கூறினார்.

சுபாஷ் கய் அவர்களிடம் இருந்து விருதினை பெற்றுக்கொண்டு நன்றியுரை அளித்த ஏ.ஆர்.ரஹ்மான், “இந்த விருதை எனக்கு அளித்த மங்கேஷ்கரின் குடும்பம், பலதலைமுறைகளை கடந்து உயர்ந்த இசை பாரம்பரியத்தை கட்டிக்காத்து வருகின்றது. பண்டிட் ஹிருதயநாத் அவர்களின் இசை நமக்கெல்லாம் ஊக்கசக்தியைப் போன்றது’ என கூறினார்.

மேலும் கிராமி விருது வென்ற இந்துஸ்தானி சங்கீத வல்லுனர் விஷ்வ மோகன் பட், மற்றும் ரிக்கி கெஜ் உள்பட பல இசையுலகப் பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
English summary-A. R. Rahman to get New award