கடந்த சில வாரங்களாக துவரும்பருப்பு விலை விஷம் போல் கடுமையாக ஏறியதால், நடுத்தர மக்கள் பெரும் அவதிப்பட்டனர். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் எடுத்த அதிரடி நடவடிக்கையால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான பருப்பு மூட்டைகள் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் விரைவில் துவரம்பருப்பு விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசின் குறைந்த விலை துவரம் பருப்பு விற்பனை நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே 15 டன் பருப்பு விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நாடு முழுவதும் ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை ரூ.220 வரையில் உயர்ந்த நிலையில் விலையை கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாட்டில் இருந்து 5 ஆயிரம் டன் துவரையை மத்திய அரசு இறக்குமதி செய்தது. இதில், தமிழக அரசு 500 டன் பெற்றுள்ளது. இதை பருப்பாக உடைத்து, ஒரு கிலோ, அரை கிலோ பாக்கெட்டுகளாக்கும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்றது. இதையடுத்து, ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய 4 மாநகரங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவுத் துறை ஆகியவைகளால் நடத்தப்படும் பல்பொருள் அங்காடிகள் உள்பட 91 கடைகளில் துவரம் பருப்பு விற்பனை நேற்று தொடங்கியது. இதில், சென்னை திருவல்லிக்கேணி, அசோக் நகர், கோடம்பாக்கம் ஆற்காடு சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள அங்காடிகளில் பொதுமக்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று ஒவ்வொருவரும் தலா 1 கிலோ துவரம் பருப்பை வாங்கிச் சென்றனர்.
இதில், அசோக் நகர் அங்காடிக்கு 750 கிலோ விற்பனைக்கு வந்திருந்தது. அதில், 12 மணிக்குள் 500 கிலோ வரையில் விற்பனையானது. அதேபோல், ஆற்காடு சாலை அங்காடியில் 500 கிலோ வரையில் ஒதுக்கிய நிலையில், 11 மணிக்குள் 250 கிலோ வரையில் விற்பனையானது. அடுத்த சில மணி நேரங்களில் பல இடங்களில் முழுவதுமாக விற்று தீர்ந்தது. இதுதொடர்பாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: முதல் நாளில் துவரம் பருப்பை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். கூடுதலாக துவரம் பருப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் விருப்பம் தெரிவித்தனர். முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை 15 டன் துவரம் பருப்பு விற்பனை ஆனது. சென்னையில் மட்டும் 5 டன் துவரம் பருப்பு விற்பனையானது என்று கூறினர்.
English summary-Bengal-gram at a lower price in Chennai.