சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளான புழல் ஏரி, பூண்டி ஏரி உள்பட நான்கு ஏரிகளுக்கு மட்டும் கூடுதலாக 55 கோடி கனஅடி நீர் வந்துள்ளதாகவும், இதனை தொடர்ந்து நான்கு குடிநீர் ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 23 கோடி கன அடியை எட்டியுள்ளதாகவும், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு மேலும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், குடிநீர் ஆதாரங்களான இந்த நான்கு ஏரிகள் அனைத்தும் விரைவில் நிரம்பி சென்னையின் குடிநீர்த் தேவைக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்
வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரங்களான புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளில் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நான்கு ஏரிகளின் மொத்த கொள்திறன் 110 கோடி கன அடியாகும்; பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து நான்கு ஏரிகளின் மொத்த நீர் இருப்பு புதன்கிழமை (நவ.11) மொத்தம் 17 கோடி கனஅடியாக இருந்தது; இது வியாழக்கிழமை (நவ.12) மொத்தம் 23 கோடி கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் (நவம்பர் 12, 2014) இந்த நான்கு ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 25 கோடி கனஅடியாக இருந்தது.
புழல், பூண்டி ஏரிகள்: குடிநீர் ஆதாரங்களில் புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 33 கோடி கன அடியாகும்; அதில் இப்போது 5 கோடி கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 32 கோடி கன அடியாகும்; அதில் இப்போது 6 கோடி கன அடி தண்ணீர் உள்ளது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 8 கோடி கன அடியாகும்; அதில் இப்போது 2 கோடி கன அடி தண்ணீர் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 36 கோடி கன அடியாகும்; அதில் இப்போது 10 கோடி கன அடி தண்ணீர் உள்ளது. இதுவரை நல்ல மழை பெய்துள்ளதாலும், இன்னும் மழை பெய்யவிருப்பதாக வானிலை அறிக்கை தெரிவிப்பதாலும் இந்த ஆண்டு சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
English Summary:The rise of the water level in the lakes due to heavy rains in Chennai.