train-161115-11
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் ஏராளமான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு கோவிலுக்கு செல்வது வழக்கம். இதனால் தெற்கு ரெயில்வே சபரிமலை சீசனையொட்டு சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் இந்த வருடமும் சபரிமலை ஐயப்ப பக்தர்களின் வசதியை முன்னிட்டு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு சபரிமலை சீசனுக்கு 294 சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து நேற்று திருவனந்தபுரத்தில் ரெயில்வே துறை இணை மந்திரி மனோஜ் சின்கா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தெற்கு ரெயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோஹ்ரி, திருவனந்தபுரம் மண்டல மேலாளர் சுனில் பாஜ்பாய் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், சபரி மலை சீசனுக்கு 294 சிறப்பு ரெயில்களை இயக்குவது என்றும், பயணிகள் வருகையைப் பொருத்து தேவைப்பட்டால் கூடுதல் ரெயில்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டதாக ரெயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இயக்கப்படும் ரெயில்களில் 3700 படுக்கை வசதிளுடன் கூடுதல் பெட்டிகளை சேர்த்திருப்பதாகவும், கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் மகரவிளக்கு நாள் நெருங்கும்போது முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்றும் ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுதவிர பயணிகளின் வசதிக்காக கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள், தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ வசதிகள், பிரீ-பெய்டு ஆட்டோ மற்றும் டாக்சி போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இந்த சிறப்பு ரெயில்களை பயன்படுத்தி கொள்ளுமாறு ரெயில்வே துறை அறிவித்துள்ளது.
English summary-Southern railways to run special trains for Sabarimala fest