வங்காள விரிகுடா கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றும் நல்ல மழை பெய்ததால் பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
சென்னை கோயம்பேடு அருகே ரெயில் நகரில் கூவம் நதியின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் நேற்று திடீரென உடைந்ததால் முகப்பேர், பாடிக்குப்பம், ரெயில் நகர் செல்லும் வாகன ஒட்டிகள் மாற்றுப்பாதை வழியாக சென்றனர். மேலும் நேற்று பூண்டி ஏரியில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து நேற்று 7-வது மற்றும் 10-வது மதகு வழியாக வினாடிக்கு 300 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அடையாறு ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் பெரும்பாக்கம் ஏரி நிரம்பி உபரி நீர் இன்று வெளியேற்றப்படுகிறது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சோழிங்கநல்லூரில் இருந்து மேடவாக்கம் வழியாக தாம்பரம் செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது.
மேலும் கனமழை காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி, அந்தமான், மும்பை, கொச்சி, திருச்சி, மதுரை, கோவை, ஐதரபாத் உள்பட பல நகரங்களுக்கு செல்ல வேண்டிய 20க்கும் மேற்பட்ட விமானங்கள் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. இந்த விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள், சென்னையில் இருந்து விமான நிலையத்துக்கு வருவதற்கு ஏற்பட்ட தாமதமே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் டெல்லி, மும்பை, ஆமதாபாத் உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து வரவேண்டிய 10 விமானங்களும் ஒருசில மணி நேரம் வரை தாமதமாகவே வந்தன.
தொடர் மழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
English summary-Rain affected areas in chennai