தமிழகம் முழுவதும் கடந்த பத்து நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் மழையின் தாக்கம் தீவிரமாக இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியது.
இந்நிலையில் தீபாவளிக்கு பிறகு ஒரே ஒரு நாள் மட்டுமே பள்ளிகள் செயல்பட்டன. கடந்த 12ஆம் தேதியில் இருந்து 22–ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. மூடப்பட்ட 11 நாட்களில் 7 நாட்கள் பள்ளிகள் வேலை நாட்களாகும். மற்ற நாட்கள் 4 நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாகும். வேலை நாட்களாகிய 7 நாட்களுக்கு பதிலாக அரையாண்டு தேர்வு விடுமுறையை ரத்து செய்யலாமா என பள்ளிக் கல்வித்துறை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
மழையால் விடுமுறை விடப்பட்ட 7 வேலை நாட்களை ஈடு செய்ய அனைத்து சனிக்கிழமைகளிலும் முழுமையாக பள்ளியை நடத்தி முடிக்க வேண்டிய பாடத்திட்டங்களை விரைந்து முடிக்கவும் திட்டமிடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஏழு விடுமுறை நாட்களை சரிக்கட்ட 7 சனிக்கிழமைகளில் முழுவேலை நாட்களாக அறிவித்தால் அதற்கு 2 மாதங்கள் ஆகிவிடும். அதனால் அரையாண்டு தேர்வு விடுமுறை காலங்களை குறைத்தோ அல்லது ரத்து செய்தோ பள்ளிகளை திறந்தால் தான் குறிப்பிட்ட காலத்திற்குள் பாடங்கள், தேர்வுகளை நடத்தி முடிக்க முடியும் என்று அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதற்கிடையில் பள்ளி, கல்லூரிகள் வரும் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு மாதாந்திர இடைத்தேர்வு மழையால் நடைபெறவில்லை என்பதால் மாதாந்திர இடைத்தேர்வு நடத்தப்படுமா? அல்லது நேரிடையாக அரையாண்டுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களுக்கும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தலின் பேரில் இணை இயக்குனர்கள் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், ஆகிய 4 மாவட்டங்களிலும் திங்கட்கிழமை பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய இணை இயக்குனர்கள் முகாமிட்டுள்ளனர். பள்ளியில் மழைநீர் தேங்கி இருந்தால் அவற்றை வெளியேற்றவும், கழிவுகளை சுத்தப்படுத்தவும் அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
english summary-Will Half yearly exams cancelled due to rains