சென்னை பெருநகர காவல்துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டும் அவ்வப்போது காவல்துறை உயரதிகாரிகள் முதல் காவலர்கள் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது 350 போலீஸார் பணியிட மாறுதலாகிச் செல்வதற்கு ஆணையர் தே.க.ராஜேந்திரன் அனுமதி அளித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.
சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் ஆகியோர் பிற சிறப்புப் பிரிவுகளுக்கும், பிற மாவட்ட மற்றும் மாநகர காவல்துறைக்கும் பணியிட மாறுதலாகிச் செல்வதற்கு விருப்பக் கடிதம் கொடுக்கப்பட்டும், அவர்கள் பணியிட மாறுதல் செய்யப்படாமல் இருந்தனர்.
இவ்வாறு கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் இந்த மாதம் வரை சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள்,காவலர்கள் என 350 பேர் விருப்பக் கடிதம் கொடுக்கப்பட்டும், பணியிட மாறுதல் செய்யப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டிருந்ததாம். கடந்த மாதம் சென்னை பெருநகர காவல்துறையின் புதிய ஆணையராக பொறுப்பேற்ற தே.க.ராஜேந்திரன், காவலர்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் விருப்பக் கடிதம் கொடுத்து பணியிட மாறுதல் செய்யப்படாமல் இருந்த 5 இன்ஸ்பெக்டர்கள், 25 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 350 போலீஸாரை, பணியிட மாறுதலாகிச் செல்வதற்கு அனுமதியை அவர் நேற்று வழங்கியுள்ளார். இதன் காரணமாக 350 காவல்துறையினர் தாங்கள் விருப்பப்பட்ட சிறப்பு பிரிவுகளுக்கும், மாவட்ட மற்றும் மாநகர காவல்துறைகளுக்கும் விரைவில் மாறுதலாகி செல்லவுள்ளதாக என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
english summary-chennai police officers transferred