கடந்த சில நாட்களாக இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் பரபரப்புக்குரிய செய்தியாக உள்ள விஷயம் சிம்பு-அனிருத்தின் பீப் பாடல். அனிருத் இசையில் சிம்பு பாடியதாக கூறப்படும் இந்த பாடலில் பெண்களை ஆபாசமாக சித்தரித்துள்ள வார்த்தைகள் இருந்ததாகக் கூறி பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கோவை காவல் நிலையத்தில் இருவர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் தங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் இருவர் மீதும் கோவை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ராதிகா கொடுத்த புகாரின் அடிப்படையில் சிம்பு, அனிருத் மீது பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதற்கு எதிரான சட்டம் பிரிவு 4, பெண்களை இழிவுபடுத்துவதற்கு எதிரான சட்டம் (509), தகவல் தொழில்நுட்பச் சட்டம்(67) ஆகியவற்றின் கீழ் கோவை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பீப் பாடலுக்கு நான் இசையமைக்கவில்லை என அனிருது தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறியிருப்பதாவது: “நான் தற்போது டொரண்டோவில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன். இந்த இசை நிகழ்ச்சிகளை சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். சர்ச்சைக்குரிய அந்த ‘பீப்’ பாடலுக்கு நான் இசையமைக்கவில்லை. அதை எழுதவோ, பாடவோ இல்லை. தேவையில்லாமல் என் பெயர் அதில் சேர்க்கப்பட்டுள்ளது.
நான் பெண்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவன். இதுபோன்ற ஒரு விரும்பத்தகாத சூழ்நிலை ஏற்பட்டதற்கு வருந்துகிறேன். இந்த விளக்கத்தின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
English summary-Music compose for peep song-Aniruth explains