சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் சாலை மிகுந்த போக்குவரத்து நெருக்கடியில் உள்ளது. ஏராளமான கண்டெய்னர் லாரிகள் இந்த வழியில் செல்வதால் பெங்களூருக்கு செல்லும் மற்றும் பெங்களூரில் இருந்து வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு கப்பல்களில் வரும் கண்டெய்னர்களில் பெரும் பகுதி லாரிகள் மூலமாகவும், குறைந்த அளவில் சரக்கு ரெயில்கள் மூலமும் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகிறது. லாரிகள் மூலம் அதிகளவில் பெங்களூருக்கு சரக்குகள் அனுப்பப்படுவதால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இத்தகையை நிலையை தவிர்க்க சென்னை துறைமுகத்தில் இருந்து பெங்களூரு தேவன்கொண்டி பகுதிக்கு முதன்முறையாக தனியார் நிறுவனத்துடன் இணைந்து சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் நேற்று நடந்தது.

இதற்காக கண்டெய்னர்கள் ஏற்றப்பட்ட சரக்கு ரெயில் துறைமுகத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. ரெயில் என்ஜினுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. சென்னை துறைமுக தலைவர் (பொறுப்பு) எம்.ஏ.பாஸ்கரச்சார், துணைத்தலைவர் சிரில் சி.ஜார்ஜ், சுங்கத்துறை முதன்மை ஆணையர் பிரனாப்குமார் தாஸ், தெற்கு ரெயில்வே முதன்மை இயக்க அதிகாரி அனந்தகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து சரக்கு ரெயில் சேவையை தொடங்கி வைத்தனர்.

இந்த சேவை குறித்து துறைமுக துணைத்தலைவர் சிரில் சி.ஜார்ஜ், தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் கருணாகரன் சத்தியநாதன் ஆகியோர் கூறியதாவது:-

சென்னை துறைமுகத்தில் இடநெருக்கடி காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வர்த்தகம் பாதித்தது. பழைய நிலைக்கு துறைமுகத்தை கொண்டு வருவதற்காக, மத்திய கப்பல் துறை அமைச்சகம் அமைத்த குழுவினரின் ஆலோசனையை ஏற்று பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. கண்டெய்னர்களில் பொருத்தப்பட்டுள்ள மின்னணு ‘சிப்’ மூலம் அவைகளை கண்காணிக்கும் முறை சோதனை அடிப்படையில் நடந்து வருகிறது. இம்மாத இறுதியில் இம்முறை முழுமையாக அமல்படுத்தப்படும்.

சென்னை துறைமுகத்தில் இருந்து பெங்களூருவுக்கு வாரம் 2 சரக்கு ரெயில்கள் வீதம் மாதம் 8 ரெயில்கள் இயக்கப்படும். ரெயிலில் 90 கண்டெய்னர்கள் கொண்டு செல்லும் வசதி இருந்தாலும், ஆரம்பத்தில் 60 முதல் 70 கண்டெய்னர்கள் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 12 லட்சம் கண்டெய்னர்கள் கையாளப்பட்டது. தற்போது ரெயில்கள் மூலம் 7 சதவீதம் கண்டெய்னர்கள் கையாளப்படுகிறது. இதனை 25 சதவீதம் வரை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

English Summary : Freight train was started between Chennai central – Bangalore.