postal_logoசென்னை மண்டலத்தில் உள்ள 20 தலைமை தபால் நிலையங்களில் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்க தெற்கு ரெயில்வேயிடம் தபால்துறை அனுமதி கோரியுள்ளதாக சென்னை மண்டல தபால்துறை தலைவர் மெர்வீன் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “தமிழகத்தில் உள்ள 94 தலைமை தபால் நிலையங்களில் 32 தபால் நிலையங்களில் ரெயில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை மண்டலத்தை பொருத்தவரையில் சென்னை சாஸ்திரிபவன், ஐ.ஐ.டி. வளாகம், கல்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் ஆகியவை உள்பட 8 தபால் நிலையங்களில் ரெயில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சாஸ்திரிபவன் தபால் நிலையத்தில் மட்டும் ரெயில் டிக்கெட் விற்பனை மூலம் ரெயில்வேக்கு ரூ.35 லட்சமும், தபால் துறைக்கு ரூ.60 முதல் ரூ.65 ஆயிரம் வரையும் வருமானம் கிடைக்கிறது. சென்னை மண்டலத்தில் உள்ள 20 தலைமை தபால் நிலையங்களிலும் ரெயில் டிக்கெட் விற்பனை மையம் அமைக்க தெற்கு ரெயில்வேயிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

பிரதமர் தொடங்கிவைத்த காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்களான பிரதான் மந்திரி ஜீவன்ஜோதி பீமா யோஜனா என்ற திட்டத்தை பிரதமர் சுடர்ஒளி காப்பீடு என்றும், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்ற திட்டத்தை பிரதமர் நட்சத்திர பாதுகாப்பு என்றும் அடல் பென்சன் யோஜனா என்ற திட்டத்தை அடல் பென்சன் திட்டம் என்றும் தமிழில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்த திட்டங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பிரதமர் நட்சத்திர பாதுகாப்பு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.12 செலுத்தினால் ரூ.2 லட்சம் வரை காப்பீடு பெறமுடியும். சென்னை மண்டலத்தில் இந்த திட்டத்தில் 25 ஆயிரம் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

English Summary: Request for Train Ticket Sale in 20 post Offices in Chennai Zone.