census20116ஆதார் அட்டை என்பது இன்னும் ஒருசில ஆண்டுகளில் ஒவ்வொரு இந்தியனுக்கும் அத்தியாவசியமான ஒரு விஷயமாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, ரேஷன் கார்டு வாங்க, ஓட்டுனர் உரிமம் பெற, வங்கி கணக்கு தொடங்க, பத்திரப்பதிவுத் துறையில் நிலம் பதிவு செய்ய, பான் கார்டு பெற, மத்திய, மாநில அரசு டெண்டர், மானியங்கள் மற்றும் சலுகைகள் பெற, வேலை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய, தொழில் மம், விவசாய நிலம், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவது உள்பட பல்வேறு வகை தேவைகளுக்கும் ஆதார் அடையாள அட்டை தற்போது அவசியமாகிறது..

இதனால் ஆதார் அடையாள அட்டை பெறுவதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் (என்.பி.ஆர்.) தகவல் தொகுப்பு உதவியுடன் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஆதார் அடையாள அட்டை கடந்த 2011-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் தகவல் தொகுப்பினை சரிசெய்தல் மற்றும் மக்கள் தொகை பதிவேட்டின் தகவல் தொகுப்பினை ஆதார் அட்டையுடன் இணைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் மக்கள் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் துறை இணை இயக்குனர் எம்.ஆர்.வி.கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 பேர். இவர்களில் 5 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 6 கோடியே 74 லட்சத்து 18 ஆயிரத்து 169 பேர். 5 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே ஆதார் அட்டை வழங்கப்படும்.

கடந்த 15-ந்தேதி வரையிலான நிலவரப்படி தமிழகத்தில் 6 கோடியே 45 லட்சத்து 14 ஆயிரத்து 52 பேரிடம் தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டு, புகைப்படம், கைரேகைகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 89.42 சதவீதம் ஆகும். இவர்களில் 5 கோடியே 88 லட்சத்து 19 ஆயிரத்து 255 பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இது 81.53 சதவீதம் ஆகும்.

சென்னையில் மட்டும் 31 லட்சத்து 56 ஆயிரத்து 50 பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் ஆதார் அட்டை எடுப்பதற்கான 640 நிரந்தர மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் வருகிற மார்ச் மாதம் வரையிலும் ஆதார் அட்டைக்கான புகைப்படம், கைரேகை பதிவு உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெறும். தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்யாதவர்கள் விவரங்களை பதிவு செய்து ஆதார் அட்டை எடுத்துக்கொள்ளலாம்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் தகவல் தொகுப்பினை சரிசெய்தல் மற்றும் தேசிய மக்கள் தொகை தகவல் தொகுப்புடன் ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கான பணிகள் தமிழகத்தில் தொடங்கியுள்ளது. இதற்கான பணிகள் கடந்த 18-ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 5-ந்தேதி வரையிலும் நடைபெறவேண்டும். சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களில் இதற்கான பணிகள் தற்போது முதல் கட்டமாக தொடங்கியுள்ளது.

பிற மாவட்டங்களில் இன்னும் ஓரிரு நாட்களில் படிப்படியாக பணிகள் தொடங்கிவிடும். இந்த பணிகளுக்காக சுமார் 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் தகவல் தொகுப்பினை சரிசெய்தல் மற்றும் மக்கள் தொகை பதிவேட்டின் தகவல் தொகுப்பினை ஆதார் அட்டையுடன் இணைக்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர் ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். ஆதார் அட்டை வாங்கி தொலைந்து போனாலோ அல்லது பெயர் மற்றும் முகவரி தவறாக இருந்தாலோ அவற்றையும் ஆன்லைனில் திருத்திக்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 English Summary: Population registry of the information collection process, from connecting with Aadhaar.