கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி உள்பட பத்துக்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட செய்தியினை பார்த்தோம். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதை அடுத்து இந்த இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக கு.கோவிந்தராஜ் என்பவர் அண்மையில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று தனது பதவி ஏற்றுக் கொண்டார். அவரிடம், சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.அழகுமீனா பொறுப்புக்களை ஒப்படைத்தார்.
சென்னை மாவட்ட புதிய ஆட்சியராக பதவி ஏற்றுள்ள கு.கோவிந்தராஜ், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். 1960ஆம் ஆண்டு பிறந்த இவர், இதற்கு முன்பு கோபிசெட்டிபாளையத்தில் வருவாய் கோட்டாட்சியராகவும், கன்னியாகுமரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மாவட்ட வருவாய் அலுவலராகவும், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தனி அலுவலராகவும், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் பொது மேலாளராகவும், ஊரக வளர்ச்சி இயக்குனரகத்தில் கூடுதல் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்
பின்னர் 2006ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து பெற்று, திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். தற்போது அவர் சென்னை மாவட்ட கலெக்டராக பதவி ஏற்றுள்ளார். புதிய மாவட்ட ஆட்சியராக பதவியேற்ற கோவிந்தராஜூக்கு சக அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். இந்தியா சுதந்திரமடைந்த பின் சென்னை மாவட்ட முதல் மாவட்ட ஆட்சியராக என்.எஸ்.அருணாசலம் பதவி வகித்தார். அவரை தொடர்ந்து பலர் மாவட்ட ஆட்சியர்கள் பதவி வகித்து, தற்போது சென்னை மாவட்டத்தின் 66வது மாவட்ட ஆட்சியராக கு.கோவிந்தராஜ் பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary: K. Govindaraj Inauguration of New District Collector of Chennai.