ஆங்கில மருத்துவதால் குணப்படுத்த முடியாத பல நோய்களை மூலிகை மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும் என்று நிரூபிக்கப்பட்டு வரும் நிலையில் மூலிகை மருந்துகளின் சிறப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு நோய்களைக் குணப்படுத்துவதில் மூலிகை மருந்துகளின் பங்குகள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்கை, தாவரவியல் துறை, மூலிகை தாவரங்கள் பாதுகாப்பு, வளர்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
இந்த கருத்தரங்கம் குறித்து கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் சேகர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ” இந்த கருத்தரங்கில் முக்கிய நோக்கமாக மருத்துவ குணமுடைய தாவரங்களின் சாகுபடியினை மேம்படுத்துதல், மூலிகைகளை பாதுகாத்தல், காப்புரிமை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில், மூலிகைச் செடி சாகுபடி செய்வோர், விற்பனை செய்வோர், மருந்து தயாரிப்போர், மூலிகைத் தாவர ஆராய்ச்சியாளர்கள், மூலிகை ஆய்வு மேற்கொள்வோர், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 1000-த்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். மேலும் அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான், துருக்கி, கொரியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மூலிகை ஆய்வாளர்கள், மருத்துவர்கள் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர்.
மருத்துவ மூலிகைகளை தாவரப்பெயருடன் அடையாளங்கண்டு, காப்புரிமை பெறுவதற்கு முயற்சி எடுக்கும் விதமாக கருத்தரங்கு அமையும். அதேபோல், மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் பழங்குடியினர்களின் வாழ்வாதாரத்துக்கு சாகுபடி செய்யவும், அவர்கள் பயன்படுத்தும் முறை குறித்தும் கருத்தரங்கில் ஆய்வறிக்கை அளிக்கப்பட உள்ளது’ இவ்வாறு சேகர் கூறினார்.
English Summary: 3-day seminar will be held in Chennai on herbal medicines.