chennai-corporation-3110201சென்னை மாநகராட்சியின் கூட்டம், ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. 2016 ஆம் ஆண்டில் நடத்தப்படும் இந்த முதல் கூட்டத்தில் மாநகராட்சியின் புதிய ஆணையராக பி.சந்திரமோகன் மற்றும் மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் பா.பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி பகுதிகளில் ரூ.300 கோடி செலவில் தெரு விளக்குகள் அமைக்க அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரம் தெரு விளக்குகள் ஏற்கனவே உள்ள நிலையில் புதிதாக இணைக்கப்பட்ட மண்டலங்களான திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகியவற்றில் 94 ஆயிரம் தெரு விளக்குகள் மட்டுமே உள்ளன. எனவே மாநகராட்சியின் பிரதான பகுதியில் உள்ளதுபோல, விரிவாக்கப்பட்ட பகுதியிலும் நவீன முறையிலும் மின் சக்தி சேமிக்கும் வகையிலும் தெருவிளக்குகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது.

அதனால் சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளில் ரூ.300 கோடியில் 1 லட்சத்து 10 ஆயிரம் தெரு விளக்குகள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருந்தார். அதற்கான அரசாணை பெறப்பட்டுள்ள நிலையில், அப்பணிக்கு நேற்று மாமன்றத்தின் அனுமதி பெறப்பட்டது.மேலும் சென்னை மாநகராட்சியை பெருநகர மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாமன்ற கூட்டத்தில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவ மழையின்போது, சென்னை பகுதிகளில் உள்ள உட்புறச் சாலைகள் சேதமடைந்தன. அவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. முதல்கட்டமாக ரூ.101 கோடியில் 1,274 சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க திட்டமிடப்பட்டது. இப்பணிகளுக்கான அனுமதி கோரி மாமன்ற கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

English Summary: 300 crore to expand the Chennai Corporation in the street lights. Resolution Corporation.