காவல்துறை உங்கள் நண்பன் என காவல்நிலையங்களில் போர்டுகள் இருந்தாலும் பொதுமக்களிடம் காவல்துறை இன்னும் சற்று கடினமாக நடந்து கொள்வதாகவே பொதுமக்களின் கருத்து உள்ளது. இந்நிலையில் பொதுமக்களிடம் கோபத்தை குறைத்து கனிவாக நடந்து கொள்வது எப்படி? என்பது குறித்து சென்னை நகர போக்குவரத்து போலீசாருக்கு 1 மாதம் சிறப்பு பயிற்சி முகாம் நடத்த காவல்துறை மேலதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நேற்று நடைபெற்ற இந்த முதல் நாள் முகாமில் போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் கலந்துகொண்டு காவல்துறையினர்களுக்க்கு அறிவுரைகள் வழங்கினார்.
சென்னை நகரில் மட்டும் சுமார் 2,700 போக்குவரத்து போலீசார் பணியாற்றுகிறார்கள். வெயில், மழை, பனி என்று எல்லா காலங்களிலும் இவர்கள் சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணி செய்து வருவதால் சிலசமயம் இவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களிடம் கோபமாக நடந்து கொள்ளும் நிலை உள்ளது. இதுபோல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து போலீசார் சர்க்கரை வியாதி, இருதயநோய் போன்ற பல்வேறு வகையான நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.
மன அழுத்தம் மற்றும் கோபத்தை குறைத்து பொதுமக்களிடம் கனிவாக பேசி பழகுவதற்கு சென்னை நகர போக்குவரத்து போலீசாருக்கு ஒரு மாத காலம் சிறப்பு பயிற்சி முகாம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. தினமும் 2 மணி நேரம் இந்த பயிற்சி முகாம் நடைபெறும் என்றும் பயிற்சி முகாமில் போலீஸ்காரர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை கலந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய முதல் நாளில் போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர்.அபிலைஷா, ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டு போக்குவரத்து போலீசாருக்கு பாடம் நடத்தினார்கள்.
பயிற்சி முகாம் நடைபெறும் நாட்களில் தினமும் பல்வேறு தரப்பட்ட நிபுணர்கள் கலந்துகொண்டு பாடம் நடத்த உள்ளனர். இந்த பயிற்சி முகாமுக்கான ஏற்பாடுகளை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் ஜெயராமன், இணை கமிஷனர்கள் கணேசமூர்த்தி, நாகராஜன், உதவி கமிஷனர்கள் கண்ணன், ஸ்டீபன் ஆகியோர் செய்துள்ளனர். இந்த பயிற்சி முகாம் நல்ல பலனுள்ளதாக இருக்கிறதென்று நேற்றைய முகாமில் கலந்து கொண்ட போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
English Summary: Special training camp for police officers to act with kindness to the public.