தென்மாவட்டங்களுக்கு செல்பவர்கள் மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் ஆகியோர் பெரும்பாலும் உபயோகப்படுத்தும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் 24 மணி நேரமும் பரபரப்புடன் காணப்படும் ரயில் நிலையங்களில் ஒன்று. இந்த ரயில் நிலையத்தை தினமும் லட்சக்கணக்கான பயணிகள் கடந்து செல்கின்றனர்.
எழும்பூர் ரெயில் நிலையத்தில் இறங்கும் பயணிகள் பல்வேறு இடங்களுக்கு செல்வதால் ரெயில் நிலைய காந்தி இர்வின் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ரெயில் பயணிகள் பஸ் ஏறுவதற்கும், ஆட்டோவில் செல்வதற்கும் இந்த சாலையை கடக்க வேண்டியுள்ளது. அதுபோல மின்சார ரெயில்களுக்கு செல்லக்கூடிய பயணிகளும் காந்தி இர்வின் சாலையை கடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரவும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் காந்தி இர்வின் சாலையை கடக்க புதிய நடைமேம்பாலம் கட்ட கடந்த சில மாதங்களுக்கு முன் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டத்திற்கு தற்போது ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. சென்னை மாநகராட்சி இதற்கான திட்டத்தை தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் மூலம் செயல்படுத்துகிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்த ஒரு ஆலோசனை நிறுவனத்திடம் முதல் கட்ட பணிகளை ஆய்வு செய்ய ஒப்படைத்துள்ளது. அந்த நிறுவனம் நடைமேம்பாலம் அமைக்கும் ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இடத்தை ஆய்வு செய்து அதன் மாடல், கட்டமைப்பு போன்றவற்றை தயார் செய்து வருகிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதத்திற்குள் இந்த வேலை முடிந்ததும் நடைமேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என்றும் இந்த பணிகள் வரும் அக்டோபர் மாதம் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது.
புறநகர் மின்சார ரெயில் பயணிகள் பிளாட்பாரத்தில் இறங்கி மேம்பாலம் வழியாக காந்தி இர்வின் சாலைக்கு வரும் வழியில் 2 பாதை வழியாக வெளியேற முடியும். அதில் ஒரு பாதை வழியாக நடைமேம்பாலம் எதிர்ப்புறம் உள்ள காந்தி இர்வின் சாலைக்கு செல்ல வசதியாக நீட்டிக்கப்பட உள்ளது.
இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டால் காந்தி இர்வின் சாலையில் இருந்து ரெயில் நிலையத்திற்கு எளிதாக செல்ல முடியும். மேலும் வடக்கு புறம்முள்ள எழும்பூர் பஸ் நிலையம், பூந்தமல்லி சாலை ஆகிய பகுதிகளுக்கும் எளிதாக வர முடியும்.
English Summary: Railway Admin allow to built a Flyover near the Egmore Railway Station.