கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெகுசிறப்பாக நிகழ்த்தப்படுவது வழக்கம். இந்த விழாவுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இவ்வருடம் கும்பகோண மகாமகப் பெருவிழா பிப்ரவரி 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆண்ட்ராய்ட் ஆப்ஸ் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்”ஸை அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பெருமாள் ராஜ் தலைமையிலான ஆசிரியர்க் குழு தயாரித்துள்ளதாகவும், இந்த ஆப்ஸ் மகாமகப் பெருவிழாவுக்கான தமிழக அரசின் அதிகாரபூர்வ ஆப்ஸ் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இந்தியாவில் இந்துக்களின் புனித நீராடல் என்பதானது நதிக்கரைகளில் மட்டுமே காணப்படும் நிகழ்வாகும். கும்பகோணத்தில் மட்டுமே உள்ள புனித நீராடல் வழக்கம் மகாமகக் குளத்தில் நீராடுவதைக் குறிக்கும். மகாமக திருக்குளம் உருவானது எப்படி, தலவரலாறு, தொடர்புடைய கோயில்கள், மாசிமகம் நீராடல், திருக்குள அமைப்பு, மகாமகம் 2016 பற்றிய குறிப்புகள் இந்த ஆப்ஸில் விரிவாக முகப்பு பக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.
கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றிலும் உள்ள கோயில்களின் வரலாறு, திருவிழாக்கள், வழிபாட்டு நேரம், தொலைபேசி, அமைவிடம் ஆகிய முழு விவரங்களும் இந்த ஆப்ஸில் இடம் பெற்றுள்ளது. இந்த தகவல்கள், திருக்கோயில்கள் வழிகாட்டியின் உதவியுடன் தொகுக்கப்பட்டிருப்பதால் இந்த திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்காக, அங்கே அமைந்துள்ள விடுதிகளின் முகவரி, தொலைபேசி மற்றும் இணையதள முகவரியோடு தரப்பட்டிருக்கிறது. விடுதிகளோடு, உணவகங்களின் பெயர்களும் தொகுக்கப்பட்டுள்ளன. சைவ உணவகம், அசைவ உணவகம் என்று தனித்தனியாகப் பிரித்திருக்கும் விதம் அற்புதம்.
முக்கிய விழாக்கள் நடைபெறும் நேரங்களில், போக்குவரத்துதானே மிகவும் முக்கியம்? செயலியில் போக்குவரத்துக்காகவும் தனிப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்துகளான ரயில், அரசுப் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் ஆகியவற்றுக்கான வழித்தடமும், ரயில் பேருந்து பெயர்களும், எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. தனிப் போக்குவரத்தை விரும்புவர்களுக்கு, கால்டாக்ஸி விவரங்கள் மற்றும் அவற்றின் தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி மகாமகம் விழா குறித்த சிறப்பு அரசு இணைய தளங்களின் முகவரியோடு, மகாமக தீர்த்தத்தை பெறுவதற்கான முன்பதிவு இணைப்பும் இதில் காணப்படுகிறது.
கோயில்களின் புகைப்படங்களும், படத்தொகுப்புகளுக்கான இடுகைகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. நகர வரைபடம் குறித்த கூகுள் மேப்புகளும், பேருந்து, கார், இரு சக்கர வாகனங்களுக்கான வழித்தடங்களும் தெளிவாக இணைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வருகை மற்றும் வெளியேறும் பாதைகளின் இணைப்புகளும் இதில் அடங்கும். இப்போது ஆண்ட்ராய்ட் தளத்தில் மட்டுமே இயங்கும் ஆப்ஸை விண்டோஸ் மற்றும் ஆப்பிள் தளத்தில் பயன்படுத்துவதற்கான முயற்சியில் ஆசிரியர் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்ஸ்வடிவமைப்பு அனைத்தும் கண்ணை உறுத்தாத வண்ணங்களில், தெளிவாக அமைக்கப்பட்டிருக்கிறது. அனைவரும் பயன்படுத்தக் கூடிய வகையிலும், எளிதாய்ப் புரியும் விதத்திலும் இருப்பது கூடுதல் சிறப்பு.
English Summary: New Android App is introduced for Kumbakonam Maha Maham.