நேற்று முன் தினம் தமிழக முதல்வர் ஜெயலலிதா 108 ஆம்புலன்ஸ் சேவையின் மற்றொரு அங்கமாக விளங்கி வரும் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் திட்டத்தை தொடக்கி வைத்தார் என்பதை ஏற்கனவேஎ பார்த்தோம். இந்த திட்டத்தின் மூலம் முதல் நாளே சென்னையில் 11 பேர்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அவசரகால முதல் உதவிக்கான 41 மோட்டார் சைக்கிளில் ஆண் மற்றும் பெண் மருத்துவ உதவியாளர்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்து அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் திட்டமே மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் திட்டம். இந்த முதலுதவி மோட்டார் சைக்கிளில் பல்வேறு மருத்துவ உபகரணங்கள் இடம் பெற்று இருக்கும். உயிர் காக்கும் மருந்துகள், கருவிகள் மூலம் முதலுதவி அளித்து உயிர் பிழைக்க உதவி செய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
சென்னையில் மட்டும் முதல் கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ள இந்த மோட்டார்சைக்கிள் ஆம்புலன்சுக்கு மற்றொரு சிறப்பு என்னவெனில் 41 வாகனங்களுக்கும் ஒரே பதிவு பெற்று இருப்பதாகும். அதன் சீரியல் எழுத்துக்கள் மட்டுமே மாறியிருக்கும். மற்றபடி அனைத்து மோட்டார் சைக்கிள்களும் ‘2000’ என்ற பதிவு எண்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டம் தொடங்கிய முதல் நாளில் சென்னையில் 11 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பகுதியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் பிரிவுக்கு நேற்று முதல் அழைப்பு வந்ததாகவும் அதில் பேசிய நபர் இப்பகுதியில் ஒருவர் மயக்கமாக இருப்பதாக கூறியதை அடுத்து திருவல்லிக்கேணி கஸ்தூரிபா மருத்துவமனையில் தயாராக இருந்த மோட்டார்சைக்கிள் முதலுதவி அலுவலர் சசிகபூர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், பத்தே நிமிடங்களில் பாதிக்கப்பட்ட நபருக்கு முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டதாகவும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதே போல் மேலும் 10 பேருக்கு அவசர மருத்துவ உதவி இதன் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நுழைய முடியாத இடத்தில் நுழைந்து செல்வதற்கு ஏதுவாக மோட்டார்சைக்கிள் ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் ஆம்புலன்ஸ் போன்று அவசர ஒலி எழுப்பியவாறு செல்லும். சென்னை மாநகரில் முக்கியமான சாலை சந்திப்புகள், ஆஸ்பத்திரிகளில் தயார் நிலையில் முதல் உதவி மோட்டார் சைக்கிள் தயாராக இருக்கும். இத்திட்டம் மருத்துவ துறையில் மற்றொரு ‘மைல் கல்’ என்று கூறலாம்.
English Summary: The first day of the motorcycle ambulance help to 10 people .