இந்தியாவில் மக்கள் வாழ பாதுகாப்பான நகரம் எது என்பது குறித்து ஆய்வு நடத்திய மெர்சர் குளோபல் கன்சல்டன்சி தற்போது ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய நகரங்களில் பாதுகாப்பான நகரம் சென்னைதான் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சென்னையில்தான் குறைந்த அளவிலான குற்ற நடவடிக்கைகள், ஓரளவுக்கு மேம்பட்ட சட்ட ஒழுங்கு விதிமுறைகள் அடிப்படையில் பாதுகாப்பான நகரம் என்று மெர்சரின் வாழ்நிலை தர நிலவரம் மீதான ஆய்வு தெரிவிக்கின்றது.
இந்தியாவில் உள்ள சென்னை, ஐதராபாத், டெல்லி, மும்பை, பெங்களூரு உட்பட 7 நகரங்களை கணக்கில் எடுத்து கொண்டு ஆய்வு செய்த இந்நிறுவனம் சென்னையே பாதுகாப்பில் சிறந்தது என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் உலக அளவில் பாதுகாப்பான நகரம் என்ற பட்டியலில் சென்னை 113-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்திய அளவில் நகர் வாழ் மக்கள் தொகுதியில் தரமான வாழ்நிலையை வழங்குவதில் சென்னை 4-ம் இடத்திலும், உலக அளவில் தரமான வாழ்நிலை வழங்குவதில் சென்னைக்கு 150-வது இடமும் கிடைத்துள்ளது.
வாழ்க்கைத் தரம், குற்ற நடவடிக்கைகளின் குறைந்த அளவு, சட்ட அளவுகோல்கள், குறைந்த மாசு, மற்றும் நல்ல கல்வித்தரம் ஆகியவற்றின் மூலம் மக்கள் விரும்பும் நகரமாக சென்னை மேலும் வளர்ச்சியுறும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இது குறித்து குளோபல் மொபிலிட்டி, மெர்சர் முதல்வர் ருச்சிகா பால் கூறும்போது, “சென்னையை சிறந்த நகரமாக நாங்கள் தரநிலைப்படுத்தியுள்ளோம். மற்ற நகரங்கள் போல் இங்கு வன்முறை ஊர்வலங்களோ, பயங்கரவாத அச்சுறுத்தல்களோ இல்லை. மற்ற பெருநகரங்களை ஒப்பிடுகையில் போலீஸ் லஞ்ச லாவண்யங்களும் சென்னையில் குறைவு. சென்னையில் வாழும் மக்கள் சட்டத்துக்குட்பட்டு நடப்பவர்களாக உள்ளனர்” என்று கூறியுள்ளார்.
மேலும், நல்ல தரமான பள்ளிகள், போக்குவரத்தில் மெட்ரோ ரயில் சேவை உட்பட வாழ்க்கைத் தரத்தின் சற்றே உயர்ந்த நிலை, போக்குவரத்து நெரிசல் குறைவு ஆகியவற்றின் மூலம் சென்னை வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது என்று இந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவு சென்னை மக்களை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary: Chennai has been ranked as Indias safest city.