தமிழகத்தில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களாக செயல்பட்டு வந்து கொண்டிருக்கும் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களுக்க்கு ரூ.500 கோடி நிதி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக UGC எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் கூறியுள்ளார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 6-ஆவது பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், மாணவர்களுக்கு பட்டங்களை ஆளுநர் கே.ரோசய்யா வழங்கினார். இந்த விழாவில் ஹெச்.தேவராஜ் பேசியதாவது:

“ஆசிரியர் பட்டதாரிகளுக்கு மிகப் பெரிய சமூகப் பொறுப்பு உள்ளது. நாட்டின் வளமும், செழிப்பும் ஆசிரியர்களிடம்தான் உள்ளது. தரமான கல்வியை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அளிக்க வேண்டும்.
பட்டம் வெறும் நுழைவுச் சீட்டுதான். பட்டத்துடன், திறனும் இருந்தால்தான் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தக் காலக் கட்டத்துக்கு ஏற்ற, தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்ற திறனை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்வது அவசியம்.

திறன் மேம்பாட்டுடன் கூடிய தரமான கல்வி வழங்கப்படாத காரணத்தால்தான் இந்தியாவில் 50 சதவீத பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரிகளில் பெரும்பாலானவை கலை, அறிவியல் கல்லூரியாக மாற்ற யுஜிசி-யிடம் விண்ணப்பித்துள்ளன.

3 பல்கலைக்கழகங்களுக்கு தலா ரூ. 500 கோடி: உயர் கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருகிறது. இதன்படி, நாடு முழுவதிலும் 10 பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்து, தலா ரூ. 500 கோடி மேம்பாட்டு நிதியை வழங்க திட்டமிட்டுள்ளது.

ஆற்றல்சார் பல்கலைக்கழகங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அண்ணா பல்கலை., சென்னைப் பல்கலை., மதுரை காமராஜர் பல்கலை., ஆகிய மூன்றும் ரூ. 500 கோடி நிதியை பெறும் திறனைப் பெற்றுள்ளன. இவ்வாறு ஹெச். தேவராஜ் பேசினார்.

இந்த விழாவில் 77,900 பேர் நேரடியாகவும், தபால் வழியிலும் பட்டம் பெற்றனர். இவர்களில் ஜெயந்தி மேரி, ஷீபா ஆகிய 2 பேர் பல்கலைக்கழகத்தின் முதல் கல்வியியல் பிஎச்.டி. பட்டங்களைப் பெற்றனர். இந்த விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன், துணைவேந்தர் எஸ்.தங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

English Summary : 500 crore finance for Chennai, Anna, Kamaraj University by UGC.